வீரர்கள் கார்களுக்கு டிரைவர் வைத்திருக்கலாம் – ரிஷப் பண்ட் விபத்து குறித்து கபில் தேவ் கருத்து

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த 30-ம் தேதி விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு அதிகாலை சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.

அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீரடைந்து வருகிறது.

இந்நிலையில், ரிஷிப் பண்ட் கார் விபத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், விபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை நாம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இது போன்ற சிறந்த வீரர்கள் விபத்தை தவிர்க்க வேண்டும். நான் எனது தொடக்க கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பைக்கில் சென்று போது விபத்தை சந்தித்தேன். அந்த விபத்திற்கு பின் எனது சகோதரன் என்னை பைக் ஓட்ட அனுமதிக்கவில்லை.

வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களே கார்களை ஓட்டவேண்டிய அவசியமில்லை. டிரைவர்களை வைத்துக்கொள்ளலாம். தாங்களே வாகனங்களை ஓட்டவேண்டும் என பல வீரர்கள் விரும்புகின்றனர். ஆனால், பொறுப்புக்கள் அதிகம் இருப்பவர்கள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.