புதுடில்லி, :புதுடில்லியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் உடல், 12 கி.மீ., துாரம் சாலையில் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க ஆவன செய்யுமாறு, கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதுடில்லி போலீசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற இடத்தில், நேற்றுமுன் தினம் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம் பெண் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த காரில் ஐந்து பேர் இருந்தனர். கார் சக்கரத்தில் பெண்ணின் உடல் சிக்கிக் கொண்டது. ஆனால் காரை நிறுத்தாமல் அவர்கள் அதை ஓட்டி சென்றனர்.
அதிர்ச்சி
சக்கரத்தில் சிக்கிய பெண்ணின் ஆடைகள் கிழிந்து, உடல் உறுப்புகள் நசுங்கி உயிரிழந்த நிலையில் காஞ்ஹாவாலா என்ற இடம் வரையில் 12 கி.மீ., துாரம் அவரது உடல், சாலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டது.
இந்த காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய செய்தது. காரில் இருந்தவர்களால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக முதலில் தகவல் பரவியது.
ஆனால், போலீசார் இதை மறுத்தனர். சாலை விபத்தில் சிக்கி அந்த பெண் உயிரிழந்ததாக தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது கால், காரின் சக்கரத்தில் சிக்கி அவர் இழுத்து செல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காரில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சம்பவம் குறித்து புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
அந்த 20 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. நம் சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை.
அரிதினும் அரிதான இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும்.
அவர்கள் அரசியல் பின்புலம் உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பித்து விடாமல் கடும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடும் நடவடிக்கை
இந்த விபத்து குறித்து, புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று கூறியதாவது:
மனிதத்தன்மையற்ற கொடூர விபத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளின் செயல் நம்மை தலைகுனிய செய்துள்ளது.
இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதுடில்லி போலீசிடம் அறிக்கை கேட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்