கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சார்ஜா விமானம் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம் போல 164 பயணிகளுடன் சார்ஜா கிளம்பியது. விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே இன்ஜினில் 2 கழுகுகள் சிக்கின. இதையடுத்து விமானி அவசர அவசரமாக கோவை விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறக்கினார். இதையடுத்து அங்கிருந்த பொறியாளர்கள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது இன்ஜினில் இறந்த நிலையில் ஒரு கழுகு இருந்தது. கழுகு மோதியதில் விமான இன்ஜின் பழுதானதாக தெரிகிறது. அவற்றை பொறியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் 164 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.