கென்பரா,
இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலம். இந்த தொடரில் பல்வேறு ருசிகர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், பிக்பேஷ் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஒரு கேட்ச் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே விவாதத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி சிக்சர்ஸ் – பிரிஸ்னி ஹீட் அணிகள் நேற்று மோதின. அதில், முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்னி ஹீட் 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது. இதையடுத்து சிட்னி சிக்சர்ஸ் களமிறங்கி விளையாடியது.
இறுதியில் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான கட்டத்தை ஆட்டம் எட்டியது. அப்போது, களத்தில் இருந்த சிட்னி சிக்சர்ஸ் பேட்ஸ்மென் ஜோர்டன் ஸ்கில் லாங்க் ஆப் திசையில் பந்தை விளாசினார். அந்த பந்து கேட்ச் ஆக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது, அங்கு பவுண்டரி எல்லையில் பீல்டிங்கில் இருந்த பிரிஸ்னி ஹீட் அணி வீரர் மைகெல் நீசிர் அந்த கேட்சை பிடித்தனர். ஆனால், பவுண்டரி எல்லைக்கு மிக அருகே மிக வேகமாக சென்று கேட்சை பிடித்த மைகெல் தனது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பவுண்டரியை தாண்டி விடுவோம் என்று எண்ணி உடனடியாக பந்தை மேலே வீசினார்.
பின்னர், பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்ற மைகெல் நீசிர் மீண்டும் குதித்து பந்தை மீண்டும் மேலே வீசினார். இந்த முறை பந்து பவுண்டரி எல்லைக்குள் சென்றது. இதையடுத்து உடனடியாக பவுண்டரி எல்லைக்குள் சென்ற மைகெல் நீசிர் கேட்ச் பிடித்தார்.
பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று மீண்டும் பந்தை பவுண்டரி எல்லைக்குள் தட்டி விட்டு கேட்ச் பிடித்த நிகழ்வை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.
அதேவேளை, இந்த கேட்ச் அவுட்-ஆ…? அல்லது சிக்சரா…? என்று குழப்பம் உடனடியாக தொற்றிக்கொண்டது. இதையடுத்து, 3-ம் நடுவரின் ஆய்வுக்கு பின் அது அவுட் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு விவாதப்பொருளானது. போட்டியின் இறுதியில் சிட்னி சிக்சர் 209 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டிக்கு பின்னும் அந்த கேட்ச் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் இடையே இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. பவுண்டரிக்கு வெளியே கேட்சை பிடித்து வானத்தில் தூக்கி வீசி மீண்டும் அதை தூக்கி பவுண்டரி எல்லைக்குள் வீசியது தொடர்பாக டுவிட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது சிக்சர் தான் என்று சிலரும்… அவுட் என்று சிலரும் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த கேட்ச்க்கு அவுட் கொடுத்தது ஏன்? என்று மெல்பெர்ன் கிரிக்கெட் கிளப் விளக்கம் அளித்துள்ளது. மெல்பெர்ன் கிரிக்கெட் கிளப் சட்டப்படி, கேட்ச் முதலில் பவுண்டரி எல்லைக்கு உள்ளே பிடிக்கப்பட்டுள்ளது. பீல்டர் பந்தையும், பவுண்டரி எல்லைக்கு வெளியே உள்ள பகுதியையும் ஒரே நேரத்தில் தொடவில்லை. இதனால் அது ‘கேட்ச்’ என்று முடிவு செய்யப்பட்டு பேட்ஸ்மென் அவுட் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.