திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில், நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறக்கப்படுவது வழக்கம்.
இதன்படி, நேற்று வைகுண்ட ஏகாதசிக்காக, ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது.
இந்த வாசல் வழியாக செல்ல, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர்.
இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு தினத்திற்கு மறுநாள் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதால், தரிசனம் செய்ய பக்தர்கள் பலர் போட்டியிட்டனர். ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கே, தேவஸ்தானம் அனுமதி வழங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு தங்கத்தேர் வலம் நடைபெற்றது. ஸ்ரீதேவி – பூதேவி சமேத மலையப்ப சுவாமி, ஏழுமலையான் கோவில் மாடவீதியில் தங்கத்தேரில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
பெண்கள் பூஜைகள் செய்து, தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் பலரும் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலை பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது.
கோவில் அருகில் ஏற்படுத்தப்பட்ட பாற்கடலில் அமைக்கப்பட்ட லட்சுமி நாராயணர் அலங்காரத்தை, பக்தர்கள் தரிசித்து வணங்கினர்.
தங்கத் தேர் வலத்தின் போது அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:
தர்ம தரிசனத்துக்கு அதிக முன்னுரிமை தர, 10 நாட்களுக்கு பரிந்துரை கடிதத்தில் வழங்கப்பட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீவாணி டிக்கெட்டுகளும் நேரடியாக வழங்குவது ரத்து செய்யப்பட்டது.
தர்ம தரிசன பக்தர்களின் வசதிக்காக, திருப்பதியில் ஒன்பது இடங்களில் தர்ம தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான திட்டமிடலுடன் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்