பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அரசு விளக்கமளிக்க உத்தரவு

மதுரை: பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த முடியுமா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தரவிமலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், ‘‘பொங்கல் பரிசு பணத்தை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா’’ என்றனர். அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி,  ‘‘இந்தாண்டு பொங்கல் பரிசுப் பொருட்களுடன், ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு பொருட்களை தமிழ்நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.  கரும்பு கொள்முதல் செய்யப்பட்டதற்கான பணம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

பொங்கலுக்கு குறுகிய காலமே உள்ளதால், பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரரின் வங்கி கணக்கில் செலுத்துவது சிரமம். குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களால் பணத்தை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்படும். பலருக்கு வங்கி கணக்கே இல்லை. 3 வகையான குடும்ப அட்டைகள் இருப்பதால் அவற்றை பிரித்து வழங்குவதில் சிக்கல் ஏற்படும்’’ என்றார். அப்போது, ‘‘மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது போல இந்தப் பணியை மேற்கொள்ளலாமே’’ எனக் கூறிய நீதிபதிகள், ‘‘பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கு அல்லது தபால் அலுவலக மணியார்டர் மூலம் வழங்க முடியுமா’’ என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கமளிக்குமாறு கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.