விழுப்புரம்: விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழி தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே தொடர் பட்டினி போராட்டம் நடந்தது. இதில் அற்பிச்சம்பாளையம், சாலையம்பாளையம், ஓட்டேரிப்பாளையம், சுந்தரிப்பாளையம், நன்னாட்டாம்பாளையம், ஆனாங்கூர், சாமிப்பேட்டை, கொளத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். அவர் கூறுகையில், நாகை, விழுப்புரம் வளவனூரில் சதுரஅடிக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறார்கள். ஆனால் ஓட்டேரிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மட்டும் சதுரஅடிக்கு வெறும் ரூ.200 இழப்பீடு வழங்குகிறார்கள். இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு இருக்கக்கூடாது என்றார்.