குண்டூர்: ஆந்திர மாநிலம், குண்டூர், சதாசிவ நகர், விகாஸ் ஹாஸ்டல் மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி உய்யூரு நிவாஸ் தலைமையில் ஏழை மக்களுக்கு இலவச சேலைகள் விநியோகம் செய்யும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் பேசிவிட்டு சந்திரபாபு நாயுடு புறப்பட்டுச் சென்றார்.
இதனை தொடர்ந்து, இலவச பரிசு பொருட்கள் விநியோகம் தொடங்கியது. அதுவரை பொறுமையாக இருந்த மக்கள், பரிசு பொருட்களை வாங்க அலைமோதினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரமாதேவி (52), சையத் ஆஸியா (40), ஜான்வீ (51) ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழாவின்போது நெரிசலைக் கட்டுப்படுத்தாமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் 28-ம் தேதி கந்துகூரு பகுதியில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலால் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக உய்யூரு ஸ்ரீநிவாஸ் அறிவித்துள்ளார்.