வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் கடந்த டிச.23 முதல் ஜன.1-ம் தேதி வரை திருமொழித் திருநாள் (பகல் பத்து) உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, 10 நாட்களும் மூலவர் வேங்கடகிருஷ்ணன் பல்வேறு திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜன.2-ம் தேதி (நேற்று) திருவாய்மொழித் திருநாள் (இராப்பத்து) உற்சவம் தொடங்கியது. பகல் பத்து முடிந்து இராப்பத்து தொடங்கிய ஏகாதசி நாளான நேற்று பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் நடைபெற்றது.

இதையொட்டி, பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விஸ்வரூப தரிசனம் நடந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு முத்தங்கி சேவை நடைபெற்றது. பின்னர் உற்சவர் பார்த்தசாரதிக்கு சிறப்பு அலங்காரம், வைர அங்கி சேவை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவமூர்த்தி வைர அங்கியோடு மகா மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் 4.15 மணி அளவில் பெருமாள் உள் பிரகாரத்தை வலம் வந்த பிறகு, அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல்திறக்கப்பட்டது.

எதிரே சடகோபன் நம்மாழ்வாருக்கு அருளியவாறே, பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள், ‘‘கோவிந்தா, கோவிந்தா’’ என பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். பின்னர், உற்சவர் பரமபத வாசல் கடந்து திருவாய்மொழி மண்டபத்தில் புண்ணியக்கோடி விமானத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 6 மணி அளவில் பெருமாளை தரிசிக்க மேற்கு கோபுரம் வழியாக பொது தரிசன வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார், கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒருவர் பின் ஒருவராக சொர்க்க வாசலை கடந்து சுவாமிதரிசனம் செய்ய வைத்தனர்.

தொடர்ந்து, இரவு 10 மணிவரை பொது தரிசனம் நடைபெற்றது. இதன்பிறகு, இரவு 11.30 மணிக்கு உற்சவர் பார்த்த சாரதி, நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடந்தது. கோயிலை சுற்றிலும் அறநிலையத் துறை சார்பில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வின்
போது நம்மாழ்வாருக்கு அருளிய உற்சவர் பார்த்தசாரதி பெருமாள்.

கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்களும் தரிசிக்கும் விதமாக, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பார்த்தசாரதி கோயிலில் நேற்று தொடங்கிய இராப்பத்து உற்சவம் ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது, உற்சவர் பார்த்தசாரதி தினமும் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதேபோல, அடையாறு அனந்தபத்மநாப சுவாமி, வடபழனி ஆதிமூலப் பெருமாள், திருநீர்மலை ரங்கநாதர், தியாகராய நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கோயில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு வெகு விமரிசையாக நடந்தது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வின்போது நம்மாழ்வாருக்கு அருளிய உற்சவர் பார்த்தசாரதி பெருமாள். (அடுத்த படம்) சுவாமியை தரிசிக்க மாட வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.