`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போ தெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் பின்பற்றுகிறீர்கள்… அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங்களை மற்றவர்களுக்கும் பகிரலாம் என்று அறிவித்திருந்தோம். வாசகர்கள் அனுப்பிய வற்றில் சென்னையைச் சேர்ந்த எம்.டி.யு.மகேஸ்வரி எழுதிய இந்த பகிர்வு விகடன் குழும இணைய தள ஆறு மாத சந்தா சிறப்புப் பரிசு பெறுகிறது.
டூத் பேஸ்ட், ஷேவிங் க்ரீம் போன்றவற்றை துளி அளவு பிரஷ்ஷில் வைத்தாலே போதும். தேவை யான வேலையை அது செய்துவிடும். இதைத்தான் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து பின்பற்றிவருகிறோம். ஆனால், விளம்பரங்களில் வருவது போல, பிரஷ் முழுமைக்கும் பேஸ்ட்/க்ரீமை வைப்பதுதான் சரி என பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். அது வீண் செலவே. உதாரணத்துக்கு, ஷேவிங் செய்வதற்கு முகத்தில் கொஞ்சம் சோப்பு நுரை தேவை. இதற்கு துளி க்ரீமை பிரஷ்ஷில் வைத்தாலே போதுமான நுரை வந்துவிடுகிறது.
என் கணவர் பல வருடங்களாக இப்படித்தான் செய்கிறார். அப்படியிருக்க விளம்பரங்களில் காட்டப்படுவது போல பிரஷ் முழுக்க வைப்பதால், அது வீணாகப்போய் சூழலுக்கும் கூடுதல் கேட்டை விளைவிப்பதோடு, நம்முடைய பணத்துக்கும் வேட்டு வைக்கும்.
ஆம்… 50 கிராம் பேஸ்ட், விளம்பரத்தில் காட்டுவது போல பயன்படுத்தினால், ஒரு மாதத்தில் தீர்ந்து போகுமென்றால்… துளித்துளியாய் பயன்படுத்தும்போது இரண்டு மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்த முடியும். ஆக, ஓராண்டுக்கு 600 கிராம் பேஸ்ட் வாங்குவதற்கு பதிலாக 300 கிராமுக்கும் குறைவாக வாங்கினாலே போதுமானதாக இருக்கும். கிட்டத்தட்ட 50 சதவிகித தொகையை மிச்சப்படுத்தலாம். பிரபல நிறுவனத்தின் ஒரு ஃபிளேவரில் விற்கப்படும் பேஸ்ட் 600 கிராம், 660 ரூபாய் வருகிறது. ஆக, 330 ரூபாய் மிச்சம்.
– எம்.டி.யு.மகேஸ்வரி, சென்னை-92