புதுடெல்லி: ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் மீது கார் மோதியதில் பலியானார். அவரது சடலத்தை நிர்வாண நிலையில் காரில் 13 கிலோமீட்டர் இழுத்து சென்ற கொடூரம் நடந்து உள்ளது. டெல்லியை சேர்ந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம்பெண், புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதியது. அந்த பெண்ணின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கியதால் விபத்து நடந்துள்ளது. ஐந்து பேர் காரை நிறுத்துவதற்குப் பதிலாக, உடலை 13 கிமீ வரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இப்போது வௌியாகி உள்ளன. அதிகாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. 4 கிமீ உள்ள அந்த சாலையில் மீண்டும் மீண்டும் அந்த கார் 4-5 முறை முன்னும், பின்னும் சென்று வந்துள்ளது. சுமார் 20 கிமீ தூரத்திற்கு அந்த கார் பயணித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 5 பேரும் எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளனர். இருப்பினும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். டெல்லி கவர்னர் சக்சேனா, முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் ஷாலினி சிங் விசாரித்து அறிக்கை அளிக்கும்படி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.