ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரம். இங்கு குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள். அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் நூற்றாண்டு புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. கடைசியாக கடந்த 2019 ல் தாவரவியல் பூங்காவிற்கு 28.11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த சூழலில் 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஒமிக்ரான் தொற்று பரவியது.
இருந்தபோதும், பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. அதன்பின் ஆண்டு முழுவதும் கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர். கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். இதில் மலர் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 பேர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.