அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் சகலரினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பொறுப்புடன் புதிய வருடத்தில் அணிவகுப்போம் – புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தெரிவிப்பு
முன்னெப்பொழுதும் இல்லாத அளவு சவால்களுக்கு நாடு முகங்கொடுத்திருகு்கும் நிலையில் நாட்டிலுள்ள உயரிய நிறுவனத்தின் பணியாட் தொகுதியினர் என்ற ரீதியில் மக்களின் எதிர்பார்ப்புக்களை பொறுப்புடன் நிறைவேற்ற புதிய வருடத்தில் அனைவரும் அணிவகுக்க வேண்டும் என பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (02) பாராளுமன்ற பணியாட் தொகுதியினர் முன்னிலையில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (02) நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாணம்/உறுதியுரை எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொவிட் சவால்களை வெற்றிகொண்ட பின்னர் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும், தற்பொழுது காணப்படும் பின்னடைவுகளை வெற்றிகொள்ள அரச பணியாளர்களுக்கு விசேட பொறுப்புக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக பெருந்தொகையான அரசாங்க ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வுபெறும் பின்னணியில் முன்னெப்போதையும் விட சவாலான சூழலில் மக்களுக்கான தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற பிரதான நுழைவாயிலின் வாசல் படிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் கௌரவ பிரதி சபாநாயகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்றத்தின் சகல பணியாளர்களும் அரசசேவை உறுதியுரை /சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வு இதன் பின்னர் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர குறிப்பிடுகையில், தற்பொழுது நிலவும் சிக்கல் நிறைந்த சூழ்நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற, சவாலான சூழலில் அதிகபட்ச வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் பல புதிய குழுக்கள் ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், ஆட்சேர்ப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மட்டுப்படுத்தப்பட்ட பின்னணியில் நாம் ஒரே குடும்பமாக அதிக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் பிரதி செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.
நிலவிய கொவிட் சவால்களுக்கு மத்தியில் பாராளுமன்ற செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்ற பணியாட் தொகுதியினர் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கும் பிரதி செயலாளர் நாயகம் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக, திணைக்களங்களின் பிரதானிகள், பாராளுமன்ற பணியாட் தொகுதியினர் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.