நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்

நாகூர்: நாகை மாவட்டம் நாகூரில், உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கங்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது ; அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து துவங்கியது.

ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை , என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலமானது  அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுல் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். நிகழ்வில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப், மயக்க நிலையை அடைந்தபின்னர், அவரை தூக்கிக் கொண்டு வந்தனர். கூட்டத்தில் தூக்கி வரப்பட்ட நிலையில் சுற்றியிருந்த பக்தர்கள் அவரை தொட்டு வணங்கினர்.

பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நாகூர் தர்ஹா சந்தனக்கூடு மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கொடியேற்றத்துடன் தொடங்கிய சந்தனக்கூடு விழாவின் 8-ம் நாள் தர்கா அலங்கார வாசலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் திங்கட்கிழமையன்று (நேற்று) தொடங்கி, இரவு 8 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டுச் சென்றது.

முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிகாலை நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்த பின்னர் அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.