பாஜகவில் இருந்து விலகினார் காயத்ரி ரகுராம்!

பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டார் காயத்ரி ரகுராம். இதனை இன்று (ஜனவரி 3) காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனான மோதல் போக்கு காரணமாக கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த சூழலில் ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு குட்பை சொல்லிவிட்டார்.

பெண்களுக்கு மரியாதை இல்லை

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மிகுந்த மன வேதனையுடன் தமிழக பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளேன். ஏனெனில் எனது புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சம உரிமை கிடையாது. பெண்களுக்கு மரியாதையும் இல்லை. அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை.

மோடியும், அமித் ஷாவும்

உண்மையான தொண்டர்கள் அண்ணாமலையால் விரட்டி அடிக்கப்படுவது தான் நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு என்னுடைய வாழ்த்துகள். பிரதமர் மோடி அவர்கள் மிகவும் சிறப்புக்குரிய மனிதர். நமது தேசத்தின் தந்தை. நீங்கள் என்றுமே என்னுடைய விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவராக திகழ்வீர். என்னுடைய சாணக்கிய குருவாக அமித் ஷா என்றுமே இருப்பார்.

அண்ணாமலை மீது விமர்சனம்

நான் இந்த அவசர முடிவை எடுப்பதற்கு அண்ணாமலை தான் காரணம். இனி அவரை பற்றி பேசப் போவதில்லை. ஏனெனில் அவர் தரம் தாழ்ந்த தந்திரக்கார பொய்யர். அவ்வளவு தான். கடந்த 8 ஆண்டுகளாக என்னுடைய பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எனது அன்பும், மரியாதையும் உண்டு.

பெண்கள் பாதுகாப்பாக இருக்கவும்

தமிழக பாஜக உடனான இந்த பயணம் மிகவும் சிறப்பானது. பிறரை காயப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது. எனவே அண்ணாமலை தலைமையின் கீழ் தொடர்ந்து பணியாற்ற விரும்பவில்லை. இங்கு சமூக நீதிக்கு இடமில்லை. தமிழக பாஜகவில் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என நினைக்க வேண்டாம்.

ஆதாரங்கள் இருக்கின்றன

யாருமே வர மாட்டார்கள். நீங்கள் தான் அதற்கு பொறுப்பு. உங்களை நம்புங்கள். உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்க வேண்டாம். என்னிடம் உள்ள அனைத்து வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் அளித்து புகாரை பதிவு செய்ய தயாராக இருக்கிறேன். அண்ணாமலை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் ஒரு மோசமான பேர் வழி.

நீதி அநீதியானது

எனக்கு எதிராக செயல்பட்டு வரும் வார் ரூம் பற்றியும் புகார் அளிப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்து தர்மத்தின் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதை அரசியல் கட்சியில் தான் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக கோயிலுக்கு சென்று கடவுளிடம் தேடுவேன். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். என்னுடனும் உள்ளார். நீதி தாமதிக்கப்படுவது என்பது அது மறுக்கப்படுவதற்கு சமம் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.