சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநரகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நலம் 365 எனும் யூடியூப் சேனலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (டிச.2) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பொய்யான செய்திகளை பரப்புவதை தொழிலாக வைத்துள்ளனர். அதனை தடுக்கும் வகையில், மருத்துவத்துறை சார்பில் நலம் 365 எனும் யூடியூப் சேனல் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மக்களின் உடல் நலத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யப்படும்.
மாதத்தில் ஒரு நாள் மக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கலந்துரையாடவும், மருத்துவ துறை மீது பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த சேனல் உதவியாக இருக்கும். யோகா, மூச்சு பயிற்சியை மக்களுக்கு சொல்லித் தரவும், உணவுப் பொருள்களின் அவசியம், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த யூடியூப் சேனல் உதவியாக இருக்கும். எந்நேரமும் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த சேனல் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் அமையும். இந்த சேனலில் விளம்பரம் ஏதும் வராது” இவ்வாறு அமைச்சர் பேசினார்.