வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோயிலில் திரண்டனர் சொர்க்கவாசல் வழியாக திரளான பக்தர்கள் தரிசனம்: தங்க ரதத்தில் உற்சவர் பவனி

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தங்க ரதத்தில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான நேற்று  ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு மூலவர் கருவறையை சுற்றி உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, கர்நாடகா மாநில கவர்னர் தவர்சந்த் கெலாட், மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா, தமிழ்நாடு கைத்தறி  மற்றும் நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான நந்தகுமார் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாநில அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தனர்.

காலை 6 மணியில் இருந்து கோயிலில் தரிசனம் செய்வதற்காக டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் 4 மாடவீதியில் வலம் வந்தார். பெண்கள் வடம் பிடித்து இழுக்க பக்தர்களின் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்திற்கு மத்தியில்  பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்க ரதத்திற்கு முன்பு 2 யானைகள் ஊர்வலமாக வந்தன.

இரவு 7 மணிக்கு அதியாயன உற்சவத்தில் ‘ராபத்து உற்சவம்’ தொடங்கியது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, முதல் 11 நாட்கள் 12 ஆழ்வார்கள் எழுதிய நான்காயிரம் திவ்ய பிரபந்தத்தில் இருந்து 3 ஆயிரம் திவ்ய பிரபந்தம் பாசுரங்கள் பகல் பத்து உற்சவத்தில் ரங்கநாதர் மண்டபத்தில் பாராயணம் செய்யப்பட்டது. நேற்றிரவு முதல் 10 நாட்களுக்கு ‘ராபத்து உற்சவம்’ தொடங்கியது. இதில், நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் ஒரு நாளைக்கு 100 பாசுரங்கள் என பாராயணம் செய்யப்பட்டது. இரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.