பழனிவேல் தியாகராஜன் எதை பற்றி புத்தகம் எழுதுகிறார்? திடீரென கிளம்பிய சர்ச்சை!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு அவ்வப்போது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு புதிய பொருள்கள் கற்பிக்கப்பட்டு பரப்பப்படும். எதிர்கட்சியினர் இதை பயன்படுத்தி அவருக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்வார்கள். தற்போது அவரது ட்வீட் ஒன்று தவறாக பொருள் கொள்ளப்பட்ட நிலையில் அவர் அதற்கான விளக்கம் அளித்து மற்றொரு ட்வீட் போட்டுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவேற்றினார்.

‘எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை அடியெடுத்து வைப்பதில்லை, ஏனென்றால் அது ஒரே நதி அல்ல, அவன் ஒரே மனிதன் அல்ல’ என்ற மேற்கோளையும் குறிப்பிட்டிருந்தார். இது பண்டைய கிரேக்க தத்துவத்திலிருந்து தோன்றிய மேற்கோள். மாற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன, அவற்றுடன் நாம் எவ்வாறு மாறுகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கும் விதமான மேற்கோள் இது.

இவற்றை பதிவேற்றியதோடு, “2023ஆம் ஆண்டு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துகள். தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நேரம் இது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் மதிப்பையும், புதிய நம்பிக்கைகளுக்கான உறுதி மொழியையும் ஏற்கும் நேரம் இது. நான் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொண்டு வரும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தை எழுதத் தொடங்கியுள்ளேன். அரசிலிருந்து வெளியேறிய பிறகு அந்த புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் பதிவிட்ட உடனே இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியில் இருக்கிறாரா, அவரை பாதித்த விஷயம் என்ன, அவர் புத்தகத்தில் என்ன எழுதுகிறார், அரசிலிருந்து வெளியேறிய பிறகு புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் என்றால் அதற்கான யோசனையில் இருக்கிறாரா என்று யூகங்கள் கிளம்பின.

எனவே அடுத்த சில மணி நேரத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது குறித்து விளக்கம் அளித்து மற்றொரு ட்வீட் போட்டுள்ளார்.

அதில், “தற்செயலாக என் வார்த்தைகளின் வரிசையால் சிலருக்கு ஏற்பட்ட கவலைக்கு மன்னிக்கவும். புத்தகத்தின் உள்ளடக்கங்கள் மிகவும் நேர்மையாக இருக்கும் என்று நான் சொன்னேன், இனி நான் அமைச்சராக இருக்கும் வரை அதை வெளியிட முடியாது… அது எந்த வருடமாகவும் இருக்கலாம். (ஒவ்வொரு அமைச்சரும் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து ஓய்வுபெற வேண்டும் தானே)” என பதிவிட்டு சர்ச்சையை முடித்து வைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.