குஜராத்தில் தன்னுடைய 3 மாத குழந்தையை, மருத்துவமனையின் 3-வது மாடியிலிருந்து கீழே வீசிக்கொன்ற 23 வயது தாயை போலீஸார் கைதுசெய்தனர். இது தொடர்பாக வெளியான தகவலின்படி, அகமதாபாத்திலுள்ள சிவில் மருத்துவமனையில் இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது.
முதலில் தன்னுடைய குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய ஃபர்ஸானாபானு மாலேக் எனும் அந்தப்பெண், போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் ஆணையர் பி.பி.பிரோஜியா, “பெட்லாட் தாலுகாவைச் சேர்ந்த ஃபர்ஸானாபானு மாலேக், தன்னுடைய குழந்தை அம்ரின்பானு பிறப்பிலிருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதைத் தாங்க முடியவில்லை என்பதால் இப்படியொரு நடவடிக்கை எடுத்ததாகக் கூறியிருக்கிறார். இருப்பினும் முதலில் மருத்துவமனையிலிருந்து குழந்தை காணாமல் போனதாக இதனைத் தவறாகக் கொண்டுசெல்ல முயன்றார்.
ஆனால், மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் வேறுவிதமாக இருந்தன. அந்த சிசிடிவி காட்சிகளில் முதலில் அவர் தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு மாடி நோக்கிச் சென்றார். பின்னர் வரும்போது வெறுங்கையுடன் திரும்பினார். இறந்த குழந்தையின் உடலை மருத்துவமனை ஊழியர்களும் கண்டிருக்கின்றனர். அதையடுத்து அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்” எனக் கூறினார்.