டெல்லியில் சுல்தான்புரி பகுதியில் அதிகாலை 3 மணிக்கு ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுபற்றி போலீசாருக்கு அதிகாலை 3.24 மணியளவில் அழைப்பு சென்றுள்ளது. அதன்பின்னர், அதிகாலை 4.11 மணியளவில் இளம்பெண்ணின் உடல் நிர்வாண கோலத்தில் சாலையில் கிடக்கிறது என மற்றொரு அழைப்பு சென்றுள்ளது.
இந்த சூழலில், இளம்பெண் மீது மோதிய காரில் 5 பேர் சென்றது தெரிய வந்தது. காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியதாவது.,
கும்பலாக ஆண்கள் சிலர் தங்களது காரின் கீழ் இழுத்து சென்றதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். குற்றங்களில் அரிதினும் அரிது இந்த சம்பவம்.
இதுபற்றி துணை நிலை ஆளுநர் சக்சேனாவிடமும் பேசியுள்ளேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளேன். அவர்கள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்டக் கூடாது என்று கூறினேன். ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் உறுதி அளித்து உள்ளார்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.