திருச்சி/ஸ்ரீ வில்லிபுத்தூர்: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ரங்கா, ரங்கா என முழக்கமிட்டு ரங்கநாதரை தரிசித்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முக்கிய திருவிழாவான திருஅத்யயன உற்சவம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.பகல் பத்து திருமொழி திருநாள், ராப்பத்து திருவாய்மொழி திருநாள் என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழா டிச.22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து திருநாள் 23-ம்தேதி தொடங்கி ஜன.1-ம் தேதி வரைநடைபெற்றது.
பகல்பத்து திருநாள் முடிவுற்று, ராப்பத்து திருநாள் நேற்று தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய உற்சவமான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 2.30 மணி முதல் மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாள் ஆகியோருக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அதிகாலை 3.30 மணியளவில் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கேட்டான் வாயில், தங்கக் கொடிமரம் வழியாக வந்து, பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை ஓதினர்.
இதைத்தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே பிரவேசித்தார். சொர்க்கவாசலைக் கடந்து வந்த நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, ராமர் சன்னதி, நடைபந்தல் வழியாக 5-ம் பிரகாரம் எனப்படும் திருக்கொட்டகை பகுதிக்கு வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம், அமுது செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேவைசாதித்தார். தொடர்ந்து, மாலை அரையர் சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுதுசெய்தல் உள்ளிட்டவை நடைபெற்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் புறப்பட்டு, இரவு 10மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
சொர்க்கவாசல் திறப்பு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போலீஸார், தீயணைப்பு வீரர்கள் என 3 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மருத்துவக் குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளியூர் பக்தர்களுக்குசிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவில் 1.50 லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவு பெருமாள் மோகன அவதாரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருள்வார். ஆனால், வில்லிபுத்தூர் ஆண்டாளின் அவதார தலம் என்பதால் பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்திருள்வார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ ‘கோபாலா’ என முழங்க பெரிய பெருமாளும், அதன்பின் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாரும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பெரிய பெருமாள், ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோர் ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கலந்துகொண்டார். கோயில் அறங்காவலர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.