டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி தேர்வு… மறக்க முடியாத 2022 பிளாஷ்பேக்!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி தலைநகர் டெல்லியில் அணிவகுப்பு நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பெருமையை, பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் இருக்கும். எனவே குடியரசு தின அணிவகுப்பில் எந்தெந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு தேர்வு செய்யும்.

அலங்கார ஊர்தி மாதிரிகள்

இதற்காக ஒவ்வொரு மாநிலத்திடமும் அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தப்படும். இந்த சூழலில் கடந்த 2022ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அந்த ஊர்தியை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தி வேற லெவலுக்கு விளம்பரம் செய்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்க செய்தது மாநில அரசு.

குடியரசு தின அணிவகுப்பு

இந்நிலையில் 2023ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் எந்தெந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும் என்பதை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. இதையொட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்திருந்தது.

என்னென்ன தலைப்புகள்?

அதில், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் மாதிரியை அனுப்பி வைக்க வேண்டும். அவற்றின் மாதிரிப் படங்கள் மற்றும் 3டி அனிமேஷன் படங்களை அனுப்ப வேண்டும். இவை நான்கு கட்டங்களாக ஆய்வு செய்த பின்னரே ஊர்வலத்தில் பங்கேற்க இறுதி செய்யப்படும். குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டம், 75 ஆண்டுகால சாதனைகள் உள்ளிட்ட தலைப்புகள் இருப்பது அவசியம்.

ஓகே சொன்ன மத்திய அரசு

இதற்காக செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே நடப்பாண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியை பார்க்க முடியும். கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் அனுப்பி வைப்பட்ட அலங்கார ஊர்திக்கான மாதிரியில் பாரதியார்,

மொத்தம் 16 மாநிலங்கள்

வ.உ.சி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தன. நடப்பாண்டு மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகள் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதுதவிர ஆந்திரப் பிரதேசம், மேற்குவங்கம், ஹரியானா, அசாம், குஜராத், உத்தரப் பிரதேசம் என மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.