ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பயன்பட்டு திட்டத்தில் சித்தா, யுனானி ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்ற மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பயன்பட்டு திட்டத்தில் ஆயுர்வேதா, யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ முறைகளுக்கு ‘தின பராமரிப்புக்கு திட்டம்’ ( Day care) வகுக்கப்பட்டு அதற்கான மையங்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்து வருகிறது.
ஆனால், இந்த சலுகை சித்தா, யுனானி சிகிச்சைகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இது குறித்து ஒன்றிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பயன்பட்டு திட்டத்தில் சித்தா, யுனானி ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்ற மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த தகவலை கடிதம் மூலம் மான்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் கூறுகையில், “ஒன்றிய நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா “தின பராமரிப்பு சிகிச்சை” திட்டத்தில் இனி சித்தா, யுனானி சிகிச்சைகளுக்கும் வழி வகை செய்யப்பட உள்ளது; அதற்கான நெறி மற்றும் வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டு வருவதாக 28.12.2022 தேதியிட்ட கடிதம் வாயிலாக உறுதி அளித்து உள்ளார். அமைச்சருக்கு நன்றி. இப்பயன் விரைவில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.