ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டியில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் மேலும் 4 ஆடு, கோழிகள் பலியானதால், அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். ஈரோடு மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக 200க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் கூட்டமாக சேர்ந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி அவர்களை விபத்துக்குள்ளாக்கி விடுகின்றன. மேலும், இந்த தெரு நாயக்ள் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி போன்ற கால்நடைகளை குறி வைத்து இரவு நேரங்களில் கடித்து குதறி இழுத்து செல்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் வில்லரசம்பட்டி ஒண்டிக்காரன்பாளையத்தில் பழனிசாமி என்பவர் வளர்த்து வந்த ஒரு கன்றுக்குட்டியையும், 4 ஆடுகளையும் கடித்து கொன்றது.
இந்நிலையில், வில்லசரம்பட்டியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளரான சரவணன்(36) என்பவர், அவரது வீட்டின் பின்புறம் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டின் பின்புறம் இருந்து ஆடு, மாடுகள் சத்தம் அதிகளவில் கேட்டது.
சத்தம் கேட்டு சரவணன் எழுந்து சென்று பார்த்தபோது, தெரு நாய்கள் கூட்டாக சேர்ந்து சரவணன் வளர்த்து வந்த ஆடு, கோழிகளை கடித்து கொண்டிருந்தது. இதையடுத்து சரவணன் நாய்களை விரட்டியடித்தார். தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள், 4 கோழிகள் இறந்திருப்பதை உறுதி செய்தார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இது 3வது சம்பவம் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.