பொங்கல் விருந்தாக விஜய்யின் `வாரிசு’, அஜித்தின் `துணிவு’ வெளிவருவதால், இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் `துணிவு’ டிரெய்லர் வெளியாகி வரவேற்பை அள்ளியதால் விஜய்யின் ரசிகர்கள் `வாரிசு’ டிரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நேற்று வருவதாக இருந்த டிரெய்லர் இன்னும் வெளியாகாமல் இருப்பது ஏன், எப்போது வருகிறது என்பது குறித்து விசாரித்தோம்.
‘வாரிசு’ படத்தின் போஸ்ட் புரொக்டக்ஷன் வேலைகள் ஹைதராபாத்திலும், சென்னையிலுமாக படுவேகமாக நடந்து வருகின்றன. திட்டமிட்ட நாள்களுக்குள் மொத்த படப்பிடிப்பும் நடந்து விட்டாலும், பேட்ச் ஒர்க் வேலைகள் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதற்கு முதல்நாள் வரை நடந்தன. விழா அன்றுதான், விஜய் உட்படப் படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தனர். அதனால்தான் டிரெய்லர் அப்போது ரெடியாகாமல் இருந்தது.
விஜய்யும் கிறிஸ்துமஸ் விடுமுறையிலிருந்ததால், அவர் சென்னையில் இருக்கும் போதே, டிரெய்லரை ரெடி செய்துவிடலாம் என நினைத்தனர். அதனால்தான் நேற்று டிரெய்லர் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இப்போது டிரெய்லர் நாளை (ஜனவரி 4) வெளியாகும் என்கிறார்கள். இதனையடுத்து மீதமிருக்கும் பாடல்களையும் வெளியிடுகின்றனர்.
இதனிடையே படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் சென்னை வந்த ராம்சரணுக்கு ‘வாரிசு’ படத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் தில் ராஜூ. படத்தைப் பார்த்த ராம்சரணும் ஆச்சரியமாகி, விஜய்யை போனில் கூப்பிட்டுப் பாராட்டி மகிழ்ந்ததாகவும் சொல்கிறார்கள். டிரெய்லரில் சேர்க்க விஜய்யின் ஆக்ஷன் போர்ஷன்களை கட் செய்து வருவதாகத் தகவல்.