அமைச்சர் உதயநிதி மீது செல்லூர் ராஜூ நம்பிக்கை: இதுதான் காரணம்!

உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபடிப் போட்டிக்கு இந்திய விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் கபடி போட்டி அமைச்சூர் கபடிக் குழு சார்பாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கபடி போட்டிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

இதையடுத்து, செய்தியாளரை சந்தித்த அவர், “மதுரையில் இந்த கபடிப் போட்டி நடைபெறுவது பெரும் மகிழ்ச்சி. அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 252 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி ஈரானில் நடைபெறும் உலக கபடிப் போட்டியில் விளையாட உள்ளனர். இந்தியா சார்பில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 நபர்கள் விளையாட செல்வார்கள். இதில் தமிழர் ஒருவரும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்..” என்றார்.

மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கு தமிழக நிதி அமைச்சர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அது பாராட்டுக்குறியது. அமைச்சூர் கபாடிக் குழுவிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அம்மாவின் அரசும், எடப்பாடியார் அரசும் பல்வேறு நிதிகளை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல் இட ஒதுக்கீடுகளையும் கூடுதலாக வழங்கியுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு, இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளது. இது பாராட்டுக்குறிது. விளையாட்டுத் துறை அமைச்சராக இளைஞரான உதயநிதி சிறப்பாக செயல்படுவார்.” என நம்பிக்கை தெரிவித்தார்.

கூடுதலாக விளையாட்டு ஸ்டேடியங்கள் இருக்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அப்போது தெரிவித்தார்.

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பாக 6ஆவது ஜீனியர் பெடரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகள் மதுரையில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் ஜனவரி 3ஆம் தேதி (இன்று) வரை நடைபெறுகிறது.

போட்டியில் ஜீனியர் ஆண்கள் அணியில் ராஜஸ்தான், ஹரியானா, சந்திகர், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேஷ், தமிழ்நாடு ஆகிய அணிகளும்; ஜூனியர் பெண்கள் அணியில் ஹரியானா, பீகார், இமாச்சலப் பிரதேஷ், தெலுங்கானா, மகாராஷ்டிரா, சந்திகர், வெஸ்ட் பெங்கால், தமிழ்நாடு ஆகிய அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 1வது பரிசாக ரூ.50,000, 2வது பரிசாக ரூ.30,000 3வது பரிசாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டிக்கான செலவுகள் மற்றும் பங்குபெறும் அனைத்து வீரர்களுக்கான செலவையும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.