திருமலை: வைகுண்ட ஏகாதசியான நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் ‘தி இந்து’ குழுமம் சார்பில் அச்சிடப்பட்ட ‘திருமலா தி செவன் ஹில்ஸ் ஆஃப் சால்வேஷன்’ என்ற ஆங்கில புத்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி வெளியிட்டார். இதன் முதல் பிரதியை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் பெற்றுக்கொண்டார்.
அப்போது அறங்காவலர் சுப்பா ரெட்டி பேசியதாவது: ‘தி இந்து’ குழுமம் மிக குறுகியகாலத்தில் வெகு சிறப்பாக இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளது. மேலும், இப்புத்தகத்தில் அற்புதமான படங்களுடன் ஏழுமலையான் குறித்த பல்வேறு சிறப்பான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இப்புத்தகம் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதுபோன்ற புத்தகங்கள் ஆங்கிலம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டால் சாமானிய பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை தயாரித்த ‘தி இந்து’ குழுமத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்த தகவல்கள், கட்டுரைகளை ‘தி இந்து’ குழுமம் வெகு சிறப்பாக வழங்கி வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், ‘தி இந்து’ குழுமத்தின் பிசினஸ் லைன் ஆசிரியர் ரகுவீர் ஸ்ரீநிவாசன், தலைமை சர்குலேஷன் அதிகாரி ஸ்ரீதர், ஆந்திர மாநில விளம்பர பிரிவு அதிகாரி ஸ்ரீநிவாச ராவ், சீனியர் டிஜிஎம் சாய் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.