கோபி: கோபி அருகே உள்ள கருங்கரடு பகுதியில் ரவுண்டானா விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபியில் இருந்து அத்தாணி வழியாக அந்தியூர் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 6 மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதில் கருங்கரடு அருகே கோபி, மேவாணி, அந்தியூர் சாலை மூன்று ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சாலை விரிவாக்க பணியின் போது ரவுண்டானா பகுதியிலும் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது.
ரவுண்டானா மற்றும் சாலை விரிவாக்க பணி தொடங்கி 6 மாதமாகியும் இதுவரை 30 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை. இதனால் கோபியில் இருந்து மேவாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், அந்தியூரில் இருந்து கோபி வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றது. குறிப்பாக அந்தியூர், தவிட்டுப்பாளையம், பழைய மேட்டூர், சின்னதம்பி பாளையம், நகலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து நாள்தோறும் கோபி, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு 100 கணக்கான செங்கல் லாரிகளும், பனியன் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் சென்று வரும் நிலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் ஒரே வழியில் வரும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது. இதனால் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் ரவுண்டானா விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.