போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்றால் அதற்கு போலியோ சொட்டு மருந்துகள் முறையாக வழங்கப்படுவதே காரணமாகும். நமது நாட்டில், அரசாங்கமே முன் வந்து ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைத்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்தை அளிக்கிறது.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9ஆவது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும், இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் 9 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்குகிறது. பிறந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 2 கட்டமாக வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்து 6 வாரங்களுக்குப் பிறகு முதலாவது சொட்டு மருந்தும், 14 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகவும் வழங்கப்படுகிறது.
இதுதவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் போலியோவை ஒழித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.