ஆசை இல்லா மனிதர்கள் இல்லை. தும்பியை விரட்டி பிடிப்பது, பட்டம் விடுவது எனச் சின்ன சின்ன ஆசைகள் முதல், வீடு கட்டுவது, செட்டில் ஆவது என நீண்ட ஆசைகளையும் பலர் வைத்திருப்பதுண்டு. ஆனால் ஒருவர் ஓநாயைப் போல மாற வேண்டும் என்ற வினோதமான ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.
அதெப்படி எனக் கேட்கிறீர்களா, ஜப்பானைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுவயதில் இருந்தே ஓநாயை போல மாற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்காக ஸிப்பெட் என்ற ஆடை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடர்பு கொண்டு தன்னுடைய ஆசையை விவரித்துள்ளார். அம்மனிதனின் ஆசையை நிறைவேற்ற 50 நாட்கள் எடுத்துகொண்டு ஆடையை வடிவமைத்துள்ளனர்.
ஆடை வடிவமைப்புக்காக சுமார் 30,00,000 யென் (இந்திய மதிப்பில் 18.5 லட்சம்) வரை செலவு செய்திருக்கிறார். இறுதியில் அவரின் கனவு நிறைவேறியது. அந்த ஆடையை அணியும் போது அச்சு அசலாக ஒரு ஓநாயைப் போலவே அவர் தோற்றமளித்து இருக்கிறார்.
தன்னுடைய ஆசை நிறைவேறியதை குறித்து அம்மனிதர் கூறுகையில், “சிறுவயதில் இருந்தே விலங்குகள் என்றால் பிடிக்கும். உண்மையான விலங்குகளின் சூட் போட்டு யாராவது தொலைக்காட்சியில் தோன்றினால், நாமும் ஒரு நாள் இப்படிச் செய்வோம் என்று கனவு கண்டிருக்கிறேன்.
இறுதியாக ஆடையணிந்து கண்ணாடியைப் பார்க்கையில், எனது உருவத்தைக் கண்டு என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய கனவு அந்த தருணத்தில் நிஜமானது. உண்மையான ஓநாயைப் போலத் தோற்றமளிக்கப் பின்னங்கால்களில் நடக்க வேண்டும் என்பது மட்டும் கடினமாக இருந்தது. ஆடை அணிபவரின் வசதியில் அதிக கவனம் செலுத்தி இந்த ஆடையை அந் நிறுவனம் வடிவமைத்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்நிறுவனம் டோகோ என்ற மனிதருக்கு நாய் போன்ற ஆடையைச் செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இவரின் வினோத ஆசை சமூக வலைதளத்தில் கவனம் பெற்றதை தொடர்ந்து, `இதெல்லாம் தேவையா குமாரு’ என்பது போல பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.