கடந்த வருடத்தின் இறுதியில் தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் ‘லவ் டுடே’. ‘கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியான போதே ஒருவித எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலிருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸான முதல் நாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களையும் கடந்தும் படம் தியேட்டர்களில் ஓடி வருகிறது. இந்தக் கால இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரியான கதைக்களத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தார் பிரதீப்.
ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் அதைவிடக் கிட்டத்தட்ட 10 மடங்கு வசூலை ஈட்டிவிட்டது. இப்படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமும் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ‘லவ் டுடே’ வெற்றியின் காரணமாக இந்தியிலும் அது ரீமேக் செய்யப்பட உள்ளது. அதை போனி கபூர் தயாரிக்கிறார் என்பது போன்ற தகவல்களும் வெளியாகின. இதுகுறித்து படத்தின் இயக்குநர் பிரதீப்பிடமே பேசினோம்.
“‘லவ் டுடே’ வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியில், படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஆனால், போனி கபூர் நிறுவனம் தயாரிக்கவில்லை. வேறொரு நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதேபோல, இந்தியில் படத்தை நான் இயக்கவில்லை. எனக்கு வேறு சில வேலைகள் இருப்பதால் என்னால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. மேலும், இந்தி தெரியாத காரணத்தால் நான் அந்தப் படத்தில் நடிக்கவும் இல்லை. வேறொரு ஹீரோ நடிக்கவிருக்கிறார். ஆனால், படத்தில் ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் ரோலில் நான் நடித்தாலும் நடிப்பேன். இதையும், இன்னும் முடிவு செய்யவில்லை. இவை குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்.