டெல்லி: டெல்லியில் புத்தாண்டு அன்று காரில் இழுத்துச்செல்லப்பட்டதில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது. உயிரிழந்த அஞ்சலியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆறுதல் தெரிவித்தார். பெண்ணின் மரணத்துக்கு நீதி கிடைக்க அனைத்து வகையிலும் அரசு உறுதுணையாக இருக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி அந்த வாகனத்தில் சிக்கி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நிர்வாண கோலத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டக்குரல்கள் எழுப்பியுள்ளது.
புத்தாண்டு இரவில் அந்த 20 வயதான இளம்பெண் தனது ஸ்கூட்டியில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது ஒரு மாருதி பொலேனோ காருடன் அந்த ஸ்கூட்டி மோதி விபத்துக்குள்ளானது. அந்த காரில் வந்த 5 பேரும், காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து ஒருவர் அதிகாலை சுமார் 3 மணி அளிவில் காவல்துறைக்கு புகார் தந்துள்ளார். ஆனால் கார் வேகமாக சென்றதால் வாகனத்தை கண்டுபிடிக்க அவர்களுக்கு சிக்கலானது. இதையடுத்து சுமார் 4.11 மணிக்கு காவல்துறைக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அப்போது, ஒரு இளம்பெண்ணின் உடல் கஞ்சவாலா பகுதியில் நிர்வாணமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியது. மேலும், அந்த காரில் சென்ற தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மித்துன், மனோஜ் மிட்டல் என 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
மேலும், விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.