காரைக்கால்: காரைக்கால் அடுத்த நித்தீஸ்வரன் கிராமத்தை சேர்ந்தவர் ஜானி(20). இவர் இந்தியாவில் பசியால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரைக்காலில் இருந்து 3000 கி.மீ., தூரமுள்ள இந்திய எல்லையான வாகா வரை நடைபயணம் செல்வதற்கு முடிவு எடுத்தார்.
இதையடுத்து கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி ஜானி, காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கையில் இந்திய தேசிய கொடியுடன் விழிப்புணர்வு நடைபயணம் துவக்கினார். இந்த நடைபயணத்தில் ஜானியுடன் திருநள்ளாறு அத்திப்படுகையை சேர்ந்த தமிழ் என்பவரும் புதுச்சேரியில் இணைந்தார். இவர்களின் நடைபயணம் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களை கடந்து டிசம்பர் 27ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை அடைந்தது.
இதுகுறித்து ஜானி கூறுகையில், வாகா எல்லையிலான நடைபயணத்தில் செல்லும்போது வழியில் யாராவது உணவுக்காக காத்திருந்தால் அவர்களுக்கு உணவளித்தோம். பசியால் உள்ளவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான வழிவகைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்தியாவில் நாளொன்றுக்கு 10ல் இருவர் பசியால் அவதிப்படுவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதை பார்த்த பிறகு இந்தியாவில் பசியால் ஏற்படும் இறப்பை தடுக்க வேண்டும் என்று நோக்கில் நடைபயண விழிப்புணர்வை மேற்கொண்டோம் என்றார்.