குளச்சல்: குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பியது. விசைப்படகு மீனவர்கள் பண்டிகையை கொண்டாடி விட்டு, மறுநாள் சுனாமி நினைவு நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு ஆலய வழிபாடுகளிலும் கலந்து கொண்டு நேற்று முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடித்த சென்று உள்ளனர்.
ஒரு சில படகுகள் சுனாமி நினைவு நாள் முடிந்ததும் மீன் பிடிக்க சென்றன. இதில் ஒரு படகு இன்று காலை கரை திரும்பியது. இந்த படகில் திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட இந்த மீனை கரை சேர்க்க முடியாததால் மீனவர்கள் துண்டு துண்டுகளாக வெட்டி கரை சேர்த்தனர். மொத்தம் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து துறைமுக ஏலக்கூடத்தில் கரை சேர்க்கப்பட்ட திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். இந்த வகை மீன்களின் உறுப்புக்களில் இருந்து மருந்து தயாரிக்கப்படுவதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் ரூ..61 ஆயிரத்திற்கு விலை போனது.