வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை மல்டிபிளக்ஸ்கள், திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த, திரையரங்க உரிமையாளருக்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில், அம்மாநில அரசு வகுத்துள்ள விதிகளின்படி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிஃபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் திரையரங்க உரிமையாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், ’திரையரங்க வளாகங்கள் பொதுச்சொத்து அல்ல. அதனுள் செல்வதற்கான அனுமதி, திரையரங்க உரிமையாளரால் வழங்கப்படுகிறது. மேலும், பார்வையாளர்கள் உள்ளே உணவை வாங்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை’ என்று வாதிட்டார்.
இவ்வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பளித்தது. அதில், `திரையரங்குகள் அதன் உரிமையாளரின் தனிப்பட்ட சொத்து. பொதுமக்களுக்கு எதிரானது அல்ல என உரிமையாளர் கருதும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்க, அவருக்கு உரிமை உண்டு. ஒரு திரையரங்கு உரிமையாளருக்கு உணவு மற்றும் பானங்களை உள்ளே கொண்டு வருவதை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் உண்டு.
திரையரங்கிற்குள் கிடைக்கக்கூடியதை உட்கொள்வது என்பது முற்றிலும் திரைப்படம் பார்ப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது. பார்வையாளர்கள் பொழுதுபோக்கிற்காகத்தான் அரங்கிற்குள் வருகின்றனர். எனவே, பார்வையாளர் திரையரங்க விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வழக்கில், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, அதிகார வரம்பை மீறியதாகும். எனவே, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மல்டிஃபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்கிற்குள் பார்வையாளர்கள் வெளியில் இருந்து, அல்லது சொந்த உணவு, பானங்களை எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த, திரையரங்க உரிமையாளருக்கு உரிமை உண்டு’ என்று தீர்ப்பளித்தது.