48 நாட்கள் விரதமிருந்து முள் படுக்கையில் படுத்தபடி பெண் சாமியார் அருள்வாக்கு: திருப்புவனம் அருகே பக்தர்கள் பரவசம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் மற்றும் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை பெண் சாமியார் நாகராணி அம்மையார், மாரிமுத்து சுவாமிகள் நிர்வகித்து வருகின்றனர். பெண் சாமியார் நாகராணி அம்மையார் ஆண்டுதோறும் 48 நாட்கள் விரதமிருந்து மார்கழி 18ம் தேதி முள் படுக்கையில் படுத்து தவமிருந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.

48வது நாளான நேற்று கோயில் வாசலில் கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், சப்பாத்தி கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டது. பெண் சாமியார் நாகராணி அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள முத்துமாரி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். ஏராளமான பெண் பக்தர்கள் கும்மி கொட்டி பாட்டுப்பாடி வழிபட்டனர்.

அதன்பின் பூசாரி மாரிமுத்து சுவாமிகள் பூஜை செய்து, பெண் சாமியாரை முள் படுக்கைக்கு அழைத்து வந்தார். அவர் முள் படுக்கையில் ஏறி நின்றபடி அருள் வந்து ஆடியபடியே சில பக்தர்களுக்கு அருள்வாக்கு சொன்னார். சற்று நேரத்தில் முள் படுக்கையில் படுத்தார். மூன்று மணிநேரம் முள் படுக்கையில் படுத்து தவம் செய்தார். அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.