தமிழகம் முழுவதும் இன்று வீரபாண்டியன் கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கரூரில் ஒவ்வொரு ஆண்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் பன்னாட்டு கழகம் சார்பில் சைக்கிள் பேரணியாக சென்று கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்பொழுது கழகத்தை சேர்ந்தவர்கள் தேவராட்டம் ஆடியவாரு செல்வார்கள்.
அந்த வகையில் இன்றைய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி செல்வதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டிருந்தது. கரூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டங்கள் உள்ளவை நடத்துவதற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர்.
இந்த நிலையில் தடையை மீறி இன்று காலை வழக்கம் போல் சைக்கிள் பேரணி செல்வதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கரூர் தாலுகா அலுவலகம் அருகில் திரண்டு பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவத்திற்கு மதிமுக தலைவர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளான ஜனவரி 3ஆம் தேதி பேரணி நடத்தி தேவராட்டம் ஆடி கொண்டாடுவது வழக்கம். கரூரில் தேவராட்டம் ஆட முயன்ற இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது மன்னிக்க முடியாது” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.