தமிழக தொழிலாளர்கள், வட மாநில தொழிலாளர்கள் என தமிழக முதல்வர் பிரித்து பார்ப்பது இல்லை, தமிழகத்தில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதன்பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதுரையில் நடைபெறும் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், தமிழக அரசு ஆண்டுதோறும் 1 இலட்சம் தனியார்துறை வேலை வாய்ப்புகள் வழங்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் குறைந்தபட்ச ஊதியமாக 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அவர்கள் தொடர்ந்து பணிபுரிகிறார்களா எனவும் கண்காணிக்கப்படுகிறது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக தொழிலாளர்கள், வட மாநில தொழிலாளர்கள் என தமிழக முதல்வர் பிரித்து பார்ப்பது இல்லை, தமிழகத்தில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.