சென்னை: சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தகவல்கள் குறித்த விளம்பர ரயிலினை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (ஜன.3) பார்வையிட்டு பயணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்த பிரசுரங்களை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 09.03.2022 அரசாணை வெளியிட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மூலமாக இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் பல்வேறு தகவல் தொடர்பு செயல்பாடுகள் மக்கள் இயக்கம் மூலம் சமுதாயத்தில் பழக்க வழக்க மாற்றத்தை கொண்டுவருவதாகும். இதன் அடிப்படையில் மின்சார ரயில் பெட்டிகளில் ஊட்டச்சத்து மற்றும் சுகாதர தகவல்களை விளம்பரப்படுத்துவது ஒரு நடவடிக்கையாகும்.
இது சம்மந்தமாக ஊட்டச்சத்து மற்றும் சுகாதார செய்திகளை விளம்பரம் செய்ய, தென்னக ரயில் நிர்வாகத்திடம் 9 பெட்டிகள் கொண்ட ரயில் தொடரை ஒரு வருடத்திற்கு வாடகை எடுத்து அதற்காக ரூ.25 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயில் பெட்டிகளில் ஒட்ட வேண்டிய ஸ்டிக்கர்கள் தயார் செய்யவும் அதனை சார்ந்த செலவினங்களுக்கு ரூ6.91 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்யவேண்டி முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் > குழந்தையின் முதல் 1000 நாட்கள் மற்றும் > இரத்த சோகையை தடுத்தல் இந்த இரு கருத்துகள் சார்ந்த கீழ்கண்ட தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளது:
குழந்தையின் முதல் 1000 நாட்கள்:
- குழந்தையின் முதல் 1000 நாட்களின் முக்கிய பிரிவுகள் (கர்ப்பகாலம் 270 நாட்கள், பிரத்தியேக தாய்ப்பால் மட்டும் 180 நாட்கள் மற்றும் தாய்ப்பாலுடன் இணை உணவு அளித்தல் 550 நாட்கள்)
- குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு
- இலக்கு பயனாளிகளை அங்கன்வாடி சேவைக்கு அணுக ஊக்கப்படுத்துதல்.
- ரத்த சோகை தடுப்பு:
- இரும்புச்சத்து நிறைந்த சமச்சீர் ஊட்டச்சத்து உணவு தகவல்கள்
- தன்சுத்தம் பேணுதல் பற்றிய தகவல்
இரும்புச்சத்து மாத்திரை பற்றிய தகவல்கள்
- குடற்புழு நீக்கம்
- கை கழுவுதல்
- வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து
இந்த விளம்பரத்தின் மூலம் குழந்தையின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவத்தினை பொது மக்கள் மற்றும் பயனாளிகளுக்கு எடுத்துச் சொல்லுதல். இதனால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் சிறப்பாக அமைவதை பற்றியும், பொதுமக்களிடையே இரும்புச்சத்து நிறைந்த சமச்சீர் உணவு மற்றும் தன்சுத்தம் காப்பதினால் ரத்த சோகையில்லாமலும் ஆரோக்கியமாகவும் வாழலாம் என்ற கருத்தினை புரிய வைத்தல்.
இந்த தகவல் விளம்பர ரயில் வண்டியானது ஒரு வருட காலத்திற்கு ஆவடி, அரக்கோணம், கும்மிடிபூண்டி, மற்றும் வேளச்சேரி மார்க்கத்தில் இயங்கும்.
இந்த ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல் ரயிலினை சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை முதன்மை செயலர் ஷன்சோன்கம் ஜடக் சிரு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை மற்றும் துறை இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் வே.அமுதவல்லி, அலுவலர்கள் 03.01.2023 அன்று சென்னை புறநகர் ரயில் நிலைய நிகழ்வில் முறையாக பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்த பிரசுரங்கள் விநியோகித்தும். ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல் ரயில் இயக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.