புதுடில்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை இடித்துவிட்டு, அதிநவீன வசதிகளுடன் புதிய இல்லம் கட்டுவதற்கான தடையில்லா சான்றுகள், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்டுஉள்ளன.
புதுடில்லி கவுல்டியா சாலையில், பழைய தமிழ்நாடு இல்லம் உள்ளது. இது கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இதை இடித்துவிட்டு, அதிநவீன வசதிகளுடன் புதிய இல்லம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே புதுடில்லிக்கு வந்தபோது, இந்த பழைய கட்டடத்தை பார்வையிட்டு சென்ற நிலையில், நேற்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவும் வந்து பார்வையிட்டார்.
பின், அவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் புதுடில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின், அமைச்சர் வேலு கூறியதாவது:
புதுடில்லியில், தமிழக அரசின் அடையாளமாக, பழைய தமிழ்நாடு இல்லம், பல ஆண்டுகளாக, விளங்கி வருகிறது. இந்நிலையில், இதை நவீன வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில், முதற்கட்டமாக, புதுடில்லி நகரமைப்பு ஆணையம், தீயணைப்புத் துறை, வனத்துறை, விமான நிலைய ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து, தடையில்லா சான்றுகள் பெறப்பட்டுள்ளன. அடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, விரைவில் இறுதி வடிவம் பெறும்.
இது முடிந்ததும், தமிழக முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின், புதிய கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணி துவங்கும்.
இதையடுத்து, அதிநவீன வசதிகளுடன் கூடிய தமிழ்நாடு இல்லம் விரைவில் கிடைத்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
– புதுடில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்