புதுடில்லி, :குடும்ப தலைவரின் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதாரில் உள்ள முகவரியை, தாங்களாகவே மாற்றிக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழங்கும் ஆணையம், குடிமக்களுக்கான ஆதார் விபரங்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குடிமக்கள், தங்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தாங்களாகவே மாற்றிக் கொள்வதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ‘மை ஆதார்’ என்ற இணையதளத்தில் சென்று, இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
குடும்ப தலைவரின் ‘மொபைல் போன்’ எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து, இந்த நடவடிக்கையை துவங்கலாம்.
குடும்ப தலைவருக்கும், முகவரியில் மாற்றம் அல்லது திருத்தம் மேற்கொள்ள விரும்பும் குடும்ப உறுப்பினருக்கும் உள்ள உறவு முறைக்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக, ரேஷன் கார்டு, திருமண பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை இதற்கான சான்றாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சான்று எதுவும் இல்லாவிட்டால், குடும்ப தலைவரின் சுய ஒப்புதல் பத்திரத்தை பூர்த்தி செய்து, முகவரியில் திருத்தம் செய்யலாம். இதற்காக 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்