அமைச்சரின் பேச்சு அரசின் கருத்தாக முடியாது | The speech of the minister cannot be the opinion of the government

புதுடில்லி: அமைச்சர்கள் போன்ற பொது சேவையில் ஈடுபட்டுள்ளோரின் கருத்து சுதந்திரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘அமைச்சரின் பேச்சை, அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது’ என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

கடந்த ௨௦௧௬ ஜூலையில், புலந்த்ஷெஹர் நகரில் ஒரு பெண்ணும், அவருடைய மகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த சமாஜ்வாதி மூத்த தலைவர் அசம் கான், ‘இது அரசியல் சதி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும், அசம் கான் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும், அந்தப் பெண்ணின் கணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஒத்தி வைப்பு

இதை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற, ௨௦௧௭ல் பரிந்துரைத்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த நவ., ௧௫ல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.

இதில் கூறப்பட்டு உள்ளதாவது:

ஒரு அமைச்சரின் பேச்சை, முழுமையாக அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது.

கூட்டு பொறுப்பு என்பது இருந்தபோதும், அரசை இதில் பொறுப்பாக்க முடியாது.

நம் கலாசாரம்

கருத்து சுதந்திரம், அடிப்படை உரிமைகள் தொடர்பாக அரசியல் சாசனத்தின், ௧௯வது பிரிவில் கூறப்பட்டுள்ளவை அனைவருக்கும் பொருந்தும். இதற்கு மேலாக, அமைச்சர் போன்ற பொது சேவையில் ஈடுபட்டுள்ளோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை.

அதே நேரத்தில், நம் நாட்டில் அரசியல் சாசன கலாசாரத்தின்படி, இதுபோன்ற பொறுப்பான பதவியில் உள்ளவர்களுக்கு என சில பொறுப்புகள் உள்ளன. எந்த மதத்தினரையும், நாட்டு மக்களையும் புண்படுத்தும் வகையில் பேசக் கூடாது என்பது நம் கலாசாரம்.

இதன்படி செயல்பட்டாலே, சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

”ஒரு அமைச்சர், அமைச்சர் என்ற பொறுப்பில் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால், அதை அரசின் கருத்தாகவே எடுத்து கொள்ள வேண்டும்,” என மாறுபட்ட கருத்தை தெரிவித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, அதே நேரத்தில் தீர்ப்பில் உடன்படுவதாக கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.