இடாநகர்: இந்திய எல்லைகளில் எந்தவொரு சூழலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். எல்லையோர பாதுகாப்புப் படை அமைப்பால் அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சியாம் பாலத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், “இந்தியா ஒருபோதும் போரை விரும்புவதில்லை. அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணவே விரும்புகிறது. இது ராமரிடமிருந்தும், புத்தரிடமிருந்தும் இந்தியா பெற்ற போதனைகள். ஆனால், எல்லைப் பகுதிகளில் நம்மை யாரும் சீண்டினால் அதனை எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்திய எல்லைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து செயலாற்றி வருகிறது. இந்த பாலம் பொதுமக்கள், கனரக வாகனங்கள் விரைவாக செல்வதற்கு மட்டுமின்றி, இந்திய துருப்புகள் வேகமாக எல்லைகளை சென்றடைவதற்கும் உதவும்” என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி, அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதி அருகேவுள்ள இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதனை இந்திய ராணுவத்தினர் தடுத்தபோது ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில், மேற்கு-அப்பர் சியாங் மாவட்டங்களுக்கு நடுவே ஆலோ-யிங்கியோங் சாலையில் 100 மீட்டர் 724.3 கோடி ரூபாய் செலவில் இரும்பு பாலம் கட்டப்பட்டுள்ளது.