புதுடெல்லி: பாஜவின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜ கட்சியின் உச்சபட்ச அதிகாரம் படைத்த தேசிய செயற்குழு டெல்லியில் வரும் 16 மற்றும் 17ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, 9 மாநில தேர்தல் வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டில் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்க உள்ளன. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல்கள் கருதப்படுகின்றன. எனவே, 9 மாநில தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக செயற்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், சமீபத்தில் நடந்த குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்தும் ஒன்றிய பாஜ அரசின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மேலும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. அடுத்தடுத்து தேர்தல்கள் நடக்க உள்ளதால் அவரது பதவியை நீட்டிக்க தேசிய செயற்குழுவில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முன், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக அப்போதைய பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற போது, அவரது அமைச்சரவையில் அமித்ஷா இடம் பெற்றதால், நட்டா பாஜ தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.