'ராகுல் காந்தியின் யாத்திரை எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது' – நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் மாஹாலில் நேற்று மாலை நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுச்சேரி பொறுப்பாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான அனுமந்தராவ் பங்கேற்று பேசியதாவது: ‘‘தேசத்தை மத ரீதியாக பாஜகவும், பிரதமர் நரேந்தி மோடியும் பிளவுபடுத்தியுள்ளனர். ஆகவே தேசத்தை ஒன்றிணைக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவரது யாத்திரையில் அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். ராகுல்காந்தி வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் தன்னை காந்தியைப் போல வருத்திக்கொண்டு யாத்திரை சென்று தேசத்தில் ஒற்றுமையை ஏற்படுத்திவருகிறார். அவரது தியாகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸார் அனைவரும் மக்களைச் சந்திப்பது அவசியம். கிராமத்தில் மக்களைச் சந்தித்து காங்கிரஸின் கொள்கைகளை எடுத்துரைக்க வேண்டும்.’’ என்றார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, ‘‘ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள பாதையாத்திரை எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நம்முடைய கூட்டணிக்கு வர தயக்கம் காட்டியவர்கள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக பிரகடப்படுத்தினால் எங்களுடைய கட்சி ஆதரவு கொடுக்கும் என்று தானாக வருகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. சீனா, பாகிஸ்தான், நேபாளம், பங்காளாதேஷ், இலங்கை என அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவு இல்லாமல், இவைகளை சமாளிக்க முடியாமல் நரேந்திர மோடி அரசு திணறிக்கொண்டிருக்கிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தான் என்று தேர்தல் சமையத்தில் சொன்னார். வாக்குறுதி கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. கோப்புகள் தூங்குகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முதல்வர் ரங்கசாமி கூறி புலம்புகிறார். முதல்வர், என்.ஆர்.காங்கிரஸ் கொள்கை மாநில அந்தஸ்து. பாஜகவின் கொள்கை சிறப்பு மாநில அந்தஸ்து. இரண்டும் ஒத்துபோகவில்லை. இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே ரங்கசாமி டெல்லிக்கு சென்றுள்ளார்.

உண்மையில் மாநில அந்தஸ்து பெற ரங்கசாமி நினைத்திருந்தால் ஆட்சியில் அமர்ந்த 6 மாதங்களில் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள், கட்சியினரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். டெல்லிக்கு சென்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதில் எதையாவது செய்தாரா? இல்லை. ஆனால் அவருக்கு எப்போது பிரச்சனை வருகிதோ, துணைநிலை ஆளுநர் எப்போது கோப்புகளில் கையெழுத்து போடவில்லையோ அப்போது மாநில அந்தஸ்து பிரச்சனையை பேசுகிறார். உண்மையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் பாஜகவை எதிர்த்து தெருவில் இறங்கி போராட முதல்வர் ரங்கசாமிக்கு தைரியம் இருக்கிறதா? முதல்வர் நாற்காலியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். முதல்வர் பதவி வேண்டும் என்று கட்டிக்கொண்டிருக்கிறார்.

சூப்பர் முதல்வர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், டம்மி முதல்வர் ரங்கசாமி. இதுமட்டுமின்றி சட்டப்பேரவைத் தலைவர், உள்துறை அமைச்சர், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர், பாஜக கட்சி தலைவர்கள் உட்பட பல முதல்வர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது. இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஊழல் மலிந்து கிடக்கிறது. முதல்வர், அமைச்சர்கள் அலுவலகம் புரோக்கர்கள் நிறைந்துள்ளனர். பள்ளிகள், கோயில்கள், குடியிருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பப், மதுபார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளனர்.

அரசு சொத்துக்கள் தனியார் மயமாக்கும் வேலைகள் நடக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக புதுச்சேரியை குட்டிச்சுவராக்கும் வேலையை முதல்வர், அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர் சேர்ந்து கூட்டாக சதி செய்கின்றனர். இவர்களின் இந்த அவலத்தையும், மோடி அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு தலைவரும், தொண்டனும் கட்சிக்காக கடுமையாக, உண்மையாக உழைக்க வேண்டும். உழைக்க தயாராக இல்லாதவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொள்ளலாம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுச்சேரியில் போட்டியிட வேண்டும். அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றிபெற செய்ய வேண்டும்.’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.