அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள மல்டிநோமா என்ற நகர்ப்புற ரயில் நிலையம் ஒன்றில் பயணிகள் ரயில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு 3 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென அந்த குழந்தையை ரயில் பாதையில் தள்ளி விட்டுள்ளார். ரயில் பாதையில் விழுந்த சிறுமிக்கு தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர் தண்டவாளத்தில் குதித்தது குழந்தையை காப்பாற்றியுள்ளார். குழந்தையை தள்ளிவிட்ட பெண் எதுவுமே நடக்காதது போல் சென்று அங்குள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவி்ல் பதிவாகியிருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் பிரயானா லேஸ் (32) என்பது தெரியவந்தது. சிறுமியை தள்ளி விட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அதோடு போலீசார் இந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சியை இணையத்திலும் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எதற்காக 3 வயது சிறுமியை அந்தப் பெண் ரயில் பாதையில் தள்ளி விட்டார் என்பது குறித்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். மேலும், இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட பெண்ணை பிணையில் வெளிவராத அளவிற்கு கடுமையாக தண்டிக்குமாறு நீதித்துறையிடம் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.