புதுடில்லி: ‘தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவு பொருட்கள் மற்றும் பானங்களை கொண்டு வருவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தடை விதிக்கலாம்.
‘அதேநேரத்தில், பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டிய பொறுப்பு தியேட்டர் நிர்வாகத்துக்கு உள்ளது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘மல்டிபிளக்ஸ் மற்றும் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை எடுத்து வந்தால், அதற்கு தியேட்டர் நிர்வாகம் தடை விதிக்கக் கூடாது’ என, ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துஇருந்தது.
இதை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தியேட்டர் என்பது, தனியாருக்கு சொந்தமானது. இங்கு பொது நலன் மற்றும் பாதுகாப்புக்கு முரணாக இல்லாத வகையில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்க தியேட்டர் நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது.
வெளியில் இருந்து எடுத்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்யும் உரிமை, தியேட்டர் உரிமையாளர்களுக்கு உள்ளது.
பார்வையாளர்கள், வெளியில் இருந்து உணவு பொருட்கள் மற்றும் பானங்களை கொண்டு வருவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தடை விதிக்கலாம்; இது தியேட்டர் உரிமையாளரின் வணிக ரீதியான முடிவு.
ஆரோக்கியமான உணவு தேவைப்படுவதற்கு சினிமா தியேட்டர் உடற்பயிற்சி கூடமல்ல; அது, ஒரு பொழுது போக்கு அரங்கம்.
பொழுது போக்குக் காகவே பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். எந்த தியேட்டருக்கு செல்ல வேண்டும், எந்த படம் பார்க்க வேண்டும் என்பதை பார்வையாளர்களே முடிவு செய்கின்றனர். தியேட்டர்களில் உணவு பொருட்கள் வாங்கும்படி யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை.
உதாரணமாக தியேட்டரில் ஜிலேபி சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டால், அதை சாப்பிட்ட பின், கையை இருக்கையில் துடைத்தால், அதை சுத்தம் செய்வதற்கான செலவை ஏற்பது யார்?
அதேநேரத்தில், பார்வையாளர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டிய பொறுப்பு தியேட்டர் நிர்வாகத்துக்கு உள்ளது.
மேலும், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவை எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டும்.
தியேட்டரில் சாதி, மதம், இன அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டால், அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், எந்த உணவை வேண்டுமானாலும் தியேட்டருக்கு எடுத்து வரலாம் என உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்.
இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம் தன் வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்