புவனேஸ்வர், ஒடிசாவில் ஏற்கனவே இரண்டு ரஷ்யர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று பாரதீப் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் இருந்த மேலும் ஒரு ரஷ்யர் உயிரிழந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், கடந்த மாதம் ௨௧ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர்.
விசாரணை
இவர்களில் ஒருவரான விளாடிமிர் பிடனோவ், ௬௩, கடந்த ௨௨ல் தன் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இந்நிலையில், ௨௫ம் தேதி மற்றொரு ரஷ்யரான பாவெல் அனடோவ், ௬௫, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். விசாரணையில், இவர் ரஷ்யா எம்.பி., என தெரியவந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த பாவெல் அனடோவ் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரும்பு பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக, ‘எம்.வி. அல்டானாத்’ என்ற சரக்கு கப்பல், கடந்த சில நாட்களாக ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்துக்கு அருகே கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலையில், இந்த கப்பலில் பொறியாளராக பணியாற்றிய செர்ஜி மில்யாகோவ், 50, என்ற ரஷ்ய நாட்டவர், மாரடைப்பால் இறந்து விட்டதாக, துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாரடைப்பு
இது குறித்து போலீசார் கூறியதாவது:
இந்த சரக்கு கப்பல் இன்னும் துறைமுகத்துக்குள் வரவில்லை. முதல்கட்ட விசாரணையின்படி, இந்த கப்பலில் பணியாற்றிய ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர், மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் துறைமுகத்துக்குள் வந்த பின், பிரேத பரிசோதனை உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒடிசாவில் கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று பேர், அடுத்தடுத்து இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்