கலைகளே மனிதர்களை இணைக்கும் பாலம் – மியூசிக் அகாடமி விழாவில் அமெரிக்க துணை தூதரக அதிகாரி புகழாரம்

சென்னை: ‘‘கடல் கடந்து வாழும் மனிதர்களையும் இணைக்கும் பாலமாக கலைகள் விளங்குகின்றன’’ என்று அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ஜுடித் ரவின் தெரிவித்தார்.

மியூசிக் அகாடமியின் 16-வது நாட்டிய விழாவை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ஜுடித் ரவின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ‘நிருத்திய கலாநிதி’ விருதை ரமா வைத்தியநாதன் (2020), நர்த்தகி நடராஜ் (2021), பிரஹா பெசல் (2022) ஆகியோருக்கு வழங்கிய அவர், கலைஞர்களை வாழ்த்திப் பேசியதாவது:

மக்களின் வாழ்க்கையை, கலையை எனக்கு அறிமுகப்படுத்தியதில் சென்னை மியூசிக் அகாடமியின் பங்கு மகத்தானது. மரபார்ந்த நிகழ்த்துக் கலைகளை இந்த மார்கழி மாதத்தில், பல அமைப்புகளின் வழியாக மக்களின் முன் நகரமே அரங்கேற்றி மகிழ்கிறது.

இசையும், பரதநாட்டியம் உள்ளிட்ட நடனங்களும் கலை வடிவங்களும் காலம், நாடுகள் எல்லைகளைக் கடந்து மனிதர்களை இணைக்கும் பாலமாக விளங்குகின்றன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் கலை சார்ந்த பிணைப்பு இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், டி.எம்.கிருஷ்ணா, அலர்மேல்வள்ளி, இதோ இங்கு விருது பெற்றிருக்கும் கலைஞர்கள் உள்பட பலரும் தங்களின் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்தியுள்ளனர்.

பல முன்னணிக் கலைஞர்கள் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கலைகளை கற்றுத் தரும் வருகைதரு கலைஞர்களாக தங்களின் கலைப் பணியைச் செய்துள்ளனர். இந்தியாவுக்கு வெளியே இந்தியாவின் பாரம்பரியமான கர்னாடக இசையை 40 ஆண்டுகளாக நடத்திவரும் விழாவாக அமெரிக்காவின் கிளீவ்லாந்த் தியாகராஜர் ஆராதனை விழா திகழ்கிறது.

அமெரிக்காவின் பல கலைஞர்களும் இந்தியாவுக்கு கலைகளை கற்றுக்கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும், இங்கிருக்கும் கலைஞர்களோடு இணைந்து புதிய கலை நிகழ்ச்சிகளை அளிப்பதற்கும் பல காலமாக வருகின்றனர். கலைகளின் மூலமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கலாச்சார பாலமாக கலைஞர்களே இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த மியூசிக் அகாடமி தலைவர் முரளிக்கும், விருது பெற்ற கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, ‘‘சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜுடித் ரவின், பத்திரிகையாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கலாச்சார தூதுவராகவும் பல நாடுகளில் பணியாற்றி பல செயற்கரிய செயல்களால் அறியப்பட்டவர்’’ என்றார். ‘நிருத்திய கலாநிதி’ விருது பெற்ற ரமா வைத்தியநாதன், நர்த்தகி நடராஜ், பிரஹா பெசல் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். சுஜாதா விஜயராகவன் நன்றியுரையாற்றினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.