சண்டிகர், சண்டிகரில் பஞ்சாப் மற்றும் ஹரியானா முதல்வர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை, நம் ராணுவத்தினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் சண்டிகர் நகரில் அமைந்துள்ளன.
இருவரின் இல்லங்களுக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான பொருள் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதை ஆய்வு செய்த போலீசார், வெடிகுண்டு என கண்டறிந்தனர்.
இது இருந்த இடத்தின் அருகே, இரு மாநில முதல்வர்களின் ஹெலிகாப்டர்கள் இறங்குதளமும் அமைந்துள்ளதால், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து, செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கிடையே வெடிகுண்டு கண்டறியப்பட்டது குறித்து, நம் ராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர், இதை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரி சஞ்சீவ் கோலி கூறுகையில், ”கைப்பற்றப்பட்டது என்ன வகையான வெடிகுண்டு என்பதை ஆய்வு செய்து, பின், அதை செயலிழக்க வைக்கப் போவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
”பொது மக்களின் பாதுகாப்பிற்காக, இது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் செயலிழக்க வைக்கப்படும்,” என்றார்.
இருமாநில முதல்வர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களின் அருகே வெடிகுண்டு கண்டறியப்பட்டது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்